ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி நடவடிக்கையாக மே 7-ம் தேதி இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் செயல்பாட்டை மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கிய 9 பயங்கரவாத முகாம்களை அழித்து இந்தியா முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றது.

இந்த தாக்குதலுக்கு பின்னர் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பலத்த மோதல் ஏற்பட்டது. இரு நாடுகளும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இந்த மூன்று நாட்கள் நீண்ட மோதல், இருநாட்டு ராணுவம் இடையிலான நேரடி பேச்சுவார்த்தையின் மூலம் சமாதானமாக முடிவுக்கு வந்தது.

இந்த சூழ்நிலையில், பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூர் மாவட்டத்தில் உள்ள தாரா வாலி கிராம எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களிடம், அதே கிராமத்தைச் சேர்ந்த 10 வயதான சவான் சிங் என்ற 4ம் வகுப்பு மாணவன் தன்னிச்சையாக குடிநீர், ஐஸ்கிரீம், பால், லெஸ்சி உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

எல்லையில் துப்பாக்கி சண்டை நடக்கும்போதும் சிறுவன் அச்சம் அஞ்சாமல் ராணுவ வீரர்களுக்குத் தண்ணீர் வழங்கிய அவன் செயலுக்கு சமூகமூடகங்களில் பெரும் பாராட்டு கிடைத்துள்ளது. சிறுவனின் இந்த துணிச்சலான செயலை பாராட்டிய இந்திய ராணுவம், சவான் சிங்கின் எதிர்கால கல்விச் செலவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மேற்குப் பிராந்திய ராணுவ தளபதி மனோஜ் குமார் இன்று சிறுவனை நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்தார். சவானின் துணிச்சலான செயல் இன்று தேசிய அளவில் பேச்சுப்பொருளாக இருந்து, இளைய தலைமுறைக்கு நாட்டுப்பற்றை ஊட்டும் சம்பவமாக மாறியுள்ளது.