மத்தியப் பிரதேச மாநிலத்தின் சிங்க்ரௌலி மாவட்டம் சித்ராங்கி தொகுதியில் உள்ள தானி கிராம பஞ்சாயத்து பகுதிகள் மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்டுள்ளன. இங்குள்ள பெரும்பாலான மக்கள் பழங்குடியினர்.

இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், சாலை வசதியின்றி மக்கள் நடைபாதைகளில் மட்டுமே பயணிக்கின்றனர். ஆம்புலன்ஸ் சேவைகள் கிடைப்பது என்பது இங்கு ஒரு கனவாகவே இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, குல்லு கோல் என்ற கர்ப்பிணி பெண் பிரசவ வலியால் அவதிப்பட்டபோது, அவரது குடும்பத்தினர் பல்லக்கில் பல கிலோமீட்டர் தூரம் நடைபயணமாக கொண்டு சென்று அருகிலுள்ள துணை சுகாதார மையத்தில் சேர்த்தனர்.

அங்கு அந்தப் பெண் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன், மக்கள் மனதை உலுக்கும் வகையிலும் உள்ளது.

இதுபோன்ற கடுமையான சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு அரசும், மக்கள் பிரதிநிதிகளும் அடிப்படை வசதிகளை வழங்கவில்லை என கிராம மக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் சாலை வசதிகள், மருத்துவம் போன்றவைக்கு உறுதி அளிக்கப்படும் ஆனால் தேர்தலுக்கு பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. “இங்கே கட்டில்தான் ஆம்புலன்ஸ்” என கூறும் இக்கிராமத்தின் நிதர்சனமான நிலை, அரசின் வளர்ச்சி வாக்குறுதிகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.