இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறி, 28 ஆண்டுகளாக போலி ஆவணங்களுடன் வாழ்ந்த வங்காளதேச நபர் ஒருவர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடந்துள்ள இந்தச் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்காளதேசத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் என்ற நபர், 10 வயதில் மும்பைக்குள் நுழைந்துள்ளார். அப்போது இருந்தே இந்தியாவில் தங்கியிருந்த இவர், பின்னர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகருக்கு புலம்பெயர்ந்துள்ளார். அங்கு கடந்த 8 ஆண்டுகளாக “நேகா” என்ற பெயரில் திருநங்கை எனக் கூறி, புத்வாரா பகுதியில் வசித்து வந்துள்ளார். தனது அடையாளத்தை மறைத்து, ஹிஜ்ரா சமூகத்தினரின் ஆதரவுடன் தனது வாழ்க்கையை அமைத்துள்ளார்.
அப்துல் கலாம், திருநங்கை எனப் பெயர் மாற்றியமைத்த பிறகு, இந்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்காக, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் என அனைத்து ஆவணங்களையும் போலியாக தயாரித்து வைத்திருந்தார். போலி பாஸ்போர்ட் மூலம் வங்காளதேசத்திற்கே சென்றுவிட்டு திரும்பியிருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மும்பையில் ஹிஜ்ரா சமூகத்தில் இணைந்து, அவர்களின் உடன்பாட்டில் தான் தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது புலனாய்வு துறை, பயங்கரவாத ஒழிப்பு பிரிவு (ATS), மற்றும் இணையதள குற்றப் பிரிவினர் (Cyber Cell) தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பாதுகாப்புக்கு எதிரான இந்த செயலைத் தடுக்க அரசு, குற்றவாளியை கைது செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நுழையும் நபர்களை கண்டறிந்து, உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலிருந்தும் எழுந்து வருகிறது.
