மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரின் அண்ணபூர்ணா பகுதியில், 150 ஆண்டுகள் பழமையான கோவில் ஒன்றின் 70 வயது அறங்காவலர் கைலாஷ் மோடி என்பவர், அங்கு காவலாளியாகப் பணியாற்றி வந்த முகேஷ் சர்மா என்பவரால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மது அருந்திவிட்டு கோவிலுக்குள் நுழைய முயன்ற காவலாளியை அறங்காவலர் தடுத்து நிறுத்தி, அறிவுரை கூற முயன்றதே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காவலாளி முகேஷ், திடீரென ஒரு தடியை எடுத்து அறங்காவலரைத் தாக்கத் தொடங்கியுள்ளார்.

“>

இதனால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கைலாஷ் மோடி அருகில் இருந்த குருத்வாராவிற்குள் ஓடி, அதன் கதவை மூட முயன்றார். ஆனால், பின்தொடர்ந்து வந்த காவலாளி கதவைத் திறந்து உள்ளே நுழைந்து, அவரைத் தரையில் தள்ளி தடியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். தலையிலும் உடலின் மற்ற பாகங்களிலும் 30-க்கும் மேற்பட்ட முறை பலத்த அடிபட்டதால் கைலாஷ் மோடி மயங்கி விழுந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொடூரத் தாக்குதல் சம்பவத்தின் முழு காட்சிகளும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது தலைமறைவாக இருந்த காவலாளியைக் காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.