ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஹர்மடா பகுதியில், அண்டை வீட்டுக்காரரின் 5 வயது பெண் குழந்தை படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 வயதான குடியா தேவி என்ற பெண்ணைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் தனது கணவருக்கும், பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய்க்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகக் குடியா தேவி நீண்ட நாட்களாகச் சந்தேகித்து வந்துள்ளார். இந்த ஆத்திரத்தில், அந்தத் தாய்க்கு ஆறாத் துயரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அவர் இந்தக் கொடூரக் கொலையைத் திட்டமிட்டுச் செய்ததாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அண்மையில் தண்ணீர் பிடிக்கும் விஷயத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறும் இதற்கு மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது. வழக்கமாக அண்டை வீடான குடியா தேவியின் வீட்டிற்கு விளையாடச் செல்லும் அந்தச் சிறுமி, கடந்த திங்கட்கிழமை திடீரெனக் காணாமல் போனாள். குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் தேடியும் கிடைக்காததால் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் போலீஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமி குடியா தேவியின் வீட்டிற்குள் செல்வதும், அங்கிருந்து வெளியே வராததும் தெரியவந்தது. உடனடியாக அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீஸார், அங்குள்ள திவான் கட்டிலுக்குள் போர்வையால் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
