மரணத்திற்குப் பிறகு மனித உயிர் எங்கே போகிறது என்பது உலகெங்கும் தீர்க்கப்படாத மர்மமாக இருந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வு முடிவு மருத்துவ உலகையே அதிரவைத்துள்ளது.

மாரடைப்பு ஏற்பட்டு இதயம் துடிப்பதை நிறுத்திய பின்னரும், மனித மூளை சிறிது நேரம் சுறுசுறுப்பாக இயங்குவதாகவும், அந்தச் சமயத்தில் தங்களைச் சுற்றி நடக்கும் உரையாடல்களை அந்த நபரால் கேட்க முடிகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக, மாரடைப்பிலிருந்து மீண்ட பல நோயாளிகள், மருத்துவர்கள் தங்களை “இறந்துவிட்டார்” என்று அறிவித்ததைக் கூடத் தாங்கள் தெளிவாகக் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர். சுமார் 40 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகள், சிபிஆர் (CPR) சிகிச்சையின் போது தங்களுக்குச் சுயநினைவு இருந்ததையும், மருத்துவர்களின் குரல்கள் மற்றும் இயந்திரங்களின் சத்தத்தைத் தங்களால் உணர முடிந்ததையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த ஆய்வின் படி, இதயம் நின்ற சில நிமிடங்களில் மூளை முற்றிலும் செயலிழந்துவிடும் என்ற பழைய நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது. மரணத்தின் அந்த இறுதித் தருணங்களில் மூளை ‘அதி-கவன நிலை’ (Hyper-awareness) என்ற ஒரு சிறப்பு நிலையை எட்டுவதாகவும், அப்போது கேட்கும் திறன் முழுமையாக மறைந்துவிடாமல் ஒலிகளை உள்வாங்குவதாகவும் விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.

சில நோயாளிகள் தங்கள் உடலை விட்டு உயிர் பிரிந்து மேலிருந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்தது போன்ற விசித்திர உணர்வை விவரித்துள்ளனர்.

இது வெறும் மாயத்தோற்றம் அல்ல என்றும், இதயம் நின்ற பிறகும் மூளையில் சிந்தனை மற்றும் புரிதலோடு தொடர்புடைய அலைகள் காணப்படுவதே இதற்குச் சாட்சி என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது. வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடைப்பட்ட அந்தச் சில நிமிடங்கள் மனித உணர்வுநிலையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது குறித்த இந்த ஆராய்ச்சி, தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.