இந்தியாவின் பெருநகரங்களில் டிராஃபிக் ஜாம் என்பது தீர்க்க முடியாத ஒரு சாபக்கேடாக மாறிவிட்டது. குறிப்பாக குர்கான் நகரின் சாலைகளில் நிலவும் நெரிசலைக் கண்டு மனம் வெறுத்த வாலிபர் ஒருவர், தனது ஆதங்கத்தை நகைச்சுவை கலந்து வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

சிறுவயதில் ஆர்வமாக கார் ஓட்டக் கற்றுக்கொண்ட தனக்கு, இன்று குர்கான் டிராஃபிக்கில் கார் ஓட்டுவது என்பது ஒரு தண்டனையாகத் தெரிவதாக அவர் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார். ​”வீட்டிலிருந்தே வேலையைச் செய்ய முடியும் என்ற நிலை இருக்கும்போது, நிறுவனங்கள் ஏன் ஊழியர்களை ஆபீஸிற்கு வர வற்புறுத்துகின்றன?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரே கட்டிடத்திற்குள் இருக்கும் சக ஊழியர்கள் கூட நேரில் பேசாமல் போனிலேயே பேசிக்கொள்வதைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு நாளைக்கு 3 மணி நேரத்தை வெறும் டிராஃபிக்கிலேயே தொலைப்பது மனரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள், “இது என் கதைதான்” என்று கமெண்ட் செய்து அந்த இளைஞரின் உணர்வுகளுடன் தங்களை ஒப்பிட்டு வருகின்றனர்.