பிரபல ஆன்லைன் பங்குவர்த்தக நிறுவனமான ஜெரோதாவின் (Zerodha) இணை நிறுவனரும் சிஇஓ-வுமான நிதின் காமத், தங்களது நிறுவன ஊழியர் ஒருவரிடம் உடற்பயிற்சி சவாலில் (Fitness Bet) தோற்று 2.5 லட்சம் ரூபாயை இழந்த சுவாரஸ்யமான செய்தியை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார். ஜெரோதா நிறுவனத்தில் கன்டென்ட் மற்றும் மீடியா வியூகவியலாளராகப் பணியாற்றும் ரோஹித் அகர்வாலா என்ற ஊழியர், கடந்த ஓராண்டில் கடின உழைப்பால் சுமார் 30 கிலோ எடையைக் குறைத்து அசத்தியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ரோஹித், “நிதின் காமத்திடம் ஹெல்த் சேலஞ்சில் ஜெயித்து 2.5 லட்சம் ரூபாய் வாங்கியதுதான் என் வாழ்வின் மிகப்பெரிய கெத்து என்று நிதினுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

 

ஏப்ரல் மாதத்தில் 104 கிலோ எடையுடன் இருந்த ரோஹித், ஜூன் மாதத்தில் சவாலைத் தொடங்கும்போது 95 கிலோவாக இருந்தார். ஜனவரிக்குள் 75 கிலோவாகக் குறைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி ஓடிய அவர், ஜனவரி 8-ஆம் தேதி 74.5 கிலோவாகக் குறைத்து இலக்கைத் தாண்டிக் காட்டியுள்ளார். “பணம் என்பது இரண்டாம் பட்சம்தான், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி 30 கிலோ எடையைக் குறைத்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு.

ஜெரோதா நிறுவனத்தின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் கலாச்சாரமே இதற்கு முக்கியக் காரணம்” என்று ரோஹித் கூறியுள்ளார். “இந்த பெட்டில் நான் தோற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என நிதின் காமத் பெருமையுடன் பதிவிட, நெட்டிசன்கள் பலரும் “பணத்தைத் தோற்றாலும், வாழ்க்கையில் ஜெயித்துவிட்டீர்கள்; பணத்தை இழக்க இதைவிடச் சிறந்த வழி எதுவுமில்லை” என்று இருவரையும் பாராட்டித் தீர்த்து வருகின்றனர்.