மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் சட்டப்பேரவை செயல்பாடுகள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விஜயகாந்தை “வைரம்” என்றும், அவரது மகனாகிய தனக்கு அரசியலில் ஒரு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் எடுத்த முடிவுகள் உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய விஜய பிரபாகரன், “வைரத்தை இழந்துவிட்டோம், இனி தங்கத்தை இழக்கக்கூடாது” என்று நினைத்தவர்கள், அந்த வைரத்தின் மகனான தனக்கு ஏன் ஒரு வாய்ப்பை வழங்கவில்லை என கேள்வி எழுப்பினார். விஜயகாந்த் அரசியலில் இருந்த காலகட்டத்தை நினைவுகூர்ந்த அவர், சட்டப்பேரவையில் மக்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய நிலையில், தற்போதைய விவாதங்கள் வேறு திசையில் செல்வதாக விமர்சித்தார். சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்ற விஜயகாந்தின் பழைய கோரிக்கையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக அரசியலில் மூன்றாவது சக்தி உருவாக விஜயகாந்த் முக்கிய காரணமாக இருந்ததாகவும் விஜய பிரபாகரன் தெரிவித்தார். தற்போதைய சட்டப்பேரவை விவாதங்களில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை விமர்சிப்பதும், தனிப்பட்ட பிரச்னைகள் குறித்து பேசுவதும், ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதுமாக இருப்பதாக அவர் கூறினார். மக்களுக்கு தேவையான முக்கியமான பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும், சட்டப்பேரவை விவாதங்கள் பட்டிமன்றம் போல மாறிவிடக்கூடாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

மேலும், தனது தந்தை விஜயகாந்தின் மகனாக தனக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால், சட்டப்பேரவைக்குச் சென்று மக்களின் கேள்விகளை எழுப்பியிருப்பேன் என்று விஜய பிரபாகரன் கூறினார். “எனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை; அதை கேட்பது எனது உரிமை” என்றும் அவர் தெரிவித்தார். விஜயகாந்துக்குப் பிறகு அவரது குடும்பத்துக்கு அரசியலில் கிடைத்த வாய்ப்பு தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், விஜய பிரபாகரனின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.