தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியைச் சுற்றியுள்ள 14 ஊராட்சிகளில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் வனப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது. பட்டா வைத்துள்ள விவசாயிகள் கூட தங்கள் நிலங்களில் விவசாயம் செய்வதிலும், விளைபொருட்களைச் சந்தைக்குக் கொண்டு செல்வதிலும் பல்வேறு சோதனைகளையும் தடைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
பொதுமக்கள், விவசாயிகள், பட்டா வைத்திருப்பவர்கள் மற்றும் முறையான ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும் ஒரே அளவுகோலில் வைத்துப் பார்ப்பது நியாயமானதல்ல. கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளின்போது பொதுமக்களின் மறுவாழ்வு மற்றும் மாற்று ஏற்பாடுகள் ஆகியவை மனிதாபிமான அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
எனவே, மக்களின் பல ஆண்டுகால வாழ்வாதாரத்தை ஒரே நாளில் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகளுக்குப் பதிலாக, தமிழக அரசு வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் நிலஅளவைத் துறை உள்ளிட்டவை அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இக்குழு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் நிலங்களை முறையாக மறுஆய்வு செய்து, உண்மையான வனப்பகுதி, சட்டப்பூர்வப் பட்டா நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைத் தெளிவாகப் பிரித்து வரையறுக்க வேண்டும்.
தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலயத்தை ஒட்டியுள்ள 14 ஊராட்சிகளில் சுமார் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். விவசாயம், தோட்டத் தொழில், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இவர்களின் வாழ்க்கை, வனப் பாதுகாப்பு நடவடிக்கைகளால்…
— K.Annamalai (@annamalai_k) August 22, 2026
“>
வனங்களையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது எந்தளவுக்கு அவசியமோ, அதே அளவுக்குத் தலைமுறைகளாக அங்கு வாழ்ந்துவரும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும் மனிதாபிமானத்துடன் பாதுகாப்பது அரசின் முக்கியக் கடமையாகும். சட்டம் மற்றும் மனிதநேயம் இரண்டையும் சமமாகப் பேணி மேகமலை மக்களுக்கு உரிய நிரந்தரத் தீர்வை தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும்.
