வானத்தில் பறக்கும் விமானத்தில், முற்றிலும் புதிய மனிதர்களுக்கு இடையே மலரும் ஒரு சிறிய அன்பும் மனிதநேயமும் எப்போதுமே பார்ப்பவர்களின் நெஞ்சைத் தொட்டுவிடக்கூடியவை. சமீபத்தில் ஷார்ஜாவிலிருந்து தோஹா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கதார் ஏர்வேஸ் விமானத்தில் அப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

அந்த விமானத்தில் பயணம் செய்த வயதான முதியவர் ஒருவருக்கு நடப்பதில் மிகுந்த சிரமம் இருந்துள்ளது. இதைச் சற்றும் யோசிக்காமல் கவனித்த அந்த விமானப் பணிப்பெண், பணி வரம்புகளைத் தாண்டி, மிகவும் அன்போடும் பரிவோடும் அந்த முதியவருக்கு உதவி செய்ய முன்வந்தார். ஒரு மகளைப் போல அந்த முதியவரை அரவணைத்து அழைத்துச் சென்ற காட்சி, சுற்றியிருந்த பயணிகளின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தை முகமது அப்ரிதீன் என்ற சக பயணி தனது மொபைலில் படம் பிடித்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை வென்று வருகிறது.

மேலும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அதில் உதவி செய்த பணிப்பெண் தனது பெயர் எயா சாய்டர் எனப் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளார். தான் செய்தது யாருக்கோ காட்டவோ அல்லது விளம்பரத்திற்காகவோ அல்ல என்றும், யாரோ ஒருவர் இதைப் படம் பிடித்தது தெரியாது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுபோன்ற சிறிய மனிதநேயச் செயல்களே தனது வேலையை மிகவும் மதிப்பிற்குரியதாக மாற்றுகிறது என்றும் அவர் பகிர்ந்துள்ளார். இன்றைய அவசர உலகத்தில் கடமைக்காகச் வேலை செய்வதைக் கடந்து, சக மனிதரின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு உதவி செய்யும் இந்த ஏர் ஹோஸ்டஸின் குணம் அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

இதனால் “உண்மையான உபசரிப்பு என்பதும், மனிதநேயம் என்பதும் இதுதான்” என்று நெட்டிசன்கள் அந்தப் பணிப்பெண்ணைப் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். ஒரு சிறிய அன்பான செயல், ஒட்டுமொத்தப் பயணத்தின் அனுபவத்தையும் எப்படி அழகான நினைவாக மாற்றும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த சான்றாக அமைந்துள்ளது.

“>