ஆன்மீகத்தின் தலைநகரமாகவும், கங்கை நதியின் அமைதியிலும் மூழ்கியிருக்கும் புனித நகரமான வாரணாசியில், மனித நேயத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு கொடூரக் குற்றம் அரங்கேறியிருக்கிறது. ‘நட்பு’ என்ற புனிதமான சொல்லிற்குப் பின்னால் ஒளிந்திருந்த பகையும், பழியும் சேர்ந்து 19 வயது இளம் வாலிபனின் வாழ்க்கையை எப்படிப் பலிவாங்கியது என்பதை நினைக்கும் போது ரத்தம் உறைந்து போகிறது.

சிவ் பூர்வாவைச் சேர்ந்த ஈஷு கன்னௌஜியா என்ற 19 வயது இளைஞன், கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் திடீரென மாயமானான். அவனைக் காணாமல் தவித்த பெற்றோர், ஆகஸ்ட் 17-ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனால், அந்தப் புகாரின் பின்னணியில் இவ்வளவு கொடூரமான ஒரு கொலைக் காவியம் ஒளிந்திருக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்கவில்லை.

கொலையாளி பிரதீப்பும், பலியான ஈஷுவும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி, மது அருந்தும் போது ஏற்பட்ட சிறு தகராறில் ஈஷு, பிரதீப்பைத் தாக்கியுள்ளான். ‘நண்பன் தன்னை அடித்துவிட்டான்’ என்ற அவமானம் பிரதீப்பின் மனதில் ஒரு கொடூரப் பழிவாங்கும் தீயை மூட்டியது.

தன் சொந்தச் சகோதரன் ராமகிருஷ்ணா மற்றும் மற்றொரு நண்பன் ரோஹித் ஆகிய இருவரையும் சேர்த்துக் கொண்டு, ஈஷுவை உலகத்தை விட்டே அனுப்ப ஒரு கொடூரச் திட்டத்தைத் தீட்டினான் பிரதீப்.

ஆகஸ்ட் 7-ஆம் தேதி, “பழையதை மறந்துவிட்டு மீண்டும் ஒன்று சேர்வோம்” என்று கூறி, ஈஷுவை லஹர்தாரா-மஹமூர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த ரயில்வே குடியிருப்புக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவனுக்கு அளவுக்கு அதிகமாக மதுவைக் குடிக்க வைத்தனர். ஈஷு போதையில் நிலைதடுமாறிய நொடி… அவனது கைகளையும் கால்களையும் மற்ற இருவரும் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள, பிரதீப் தன் கையில் இருந்த கூர்மையான அரிவாளால் ஈஷுவின் கழுத்தை அறுத்தான்!

கழுத்து துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் ஈஷு துடிதுடித்துச் செத்த பிறகு, கொலையாளிகளின் அசுரத்தனம் அடுத்த கட்டத்திற்குச் சென்றது. உடலைக் கைவிட்டால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில், உடலை 5 துண்டுகளாக வெட்டிப் போட்டனர்.

ஆதாரங்களை எப்படி அழிப்பது என்பதை அறிவதற்காக, அவர்கள் ‘யூடியூப்’ தளத்தில் கொலை வழக்குகளின் வீடியோக்களைப் பார்த்துப் பாடம் கற்றுள்ளனர்! துர்நாற்றம் வெளியே வராமல் இருக்க, வெட்டப்பட்ட 5 உடல் பாகங்களையும் ஒரு பிளாஸ்டிக் சாக்கில் போட்டு, அருகில் இருந்த சாணக் குழியில்  அமுக்கி புதைத்தனர்.

வழக்கைப் பதிவு செய்த காவல் துறையினர், ஈஷுவின் மொபைல் போன் அழைப்பு விவரங்களை (CDR) மற்றும் அப்பகுதியில் இருந்த CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஈஷு கடைசியாகப் பேசியதும், கடைசியாகச் சென்றதும் பிரதீப்புடன் தான் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

காவல்துறையினர் பிரதீப்பைப் பிடித்துத் தங்கள் பாணியில் விசாரித்தபோது, அவன் உடைந்துபோய் முழுக் கொடூரத்தையும் ஒப்புக்கொண்டான். அவன் காட்டிய இடத்திலிருந்து, சாணக் குழியில் புதைக்கப்பட்டிருந்த ஈஷுவின் சிதைந்த உடல் பாகங்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பிரதீப், ராமகிருஷ்ணா, ரோஹித் ஆகிய மூவரும் தற்போது கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சிறிய அடிதடித் தகராறுக்காக, பல வருட நட்பு, மனிதநேயம், மனசாட்சி என அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, நண்பனின் உடலையே 5 துண்டுகளாக வெட்டும் அளவிற்கு மனித மனம் எப்படி மிருகமாக மாறுகிறது?

ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது, பழிவாங்கும் எண்ணம் ஒரு மனிதனை எப்படி அசுரனாக மாற்றுகிறது என்பதற்கு வாரணாசியில் நடந்த இந்தச் சம்பவம் ஒரு கரிய உதாரணம். நவீன தொழில்நுட்பங்கள் மனிதனின் அறிவை வளர்க்கப் பயன்பட வேண்டுமே தவிர, கொலை செய்துவிட்டுத் தப்பிப்பதற்கான வழிகளைத் தேட அல்ல என்பதை இந்தச் சோகச் சம்பவம் நமக்கு எச்சரிக்கையாகச் சொல்லிச் செல்கிறது!