இலட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் தகுதியான ஆசிரியர் வேலைக்காகக் காத்திருக்கும் சூழலில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்களின் பொறுப்பற்ற செயல்கள் ஒட்டுமொத்த கல்வித்துறையையும் தலைகுனிய வைத்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றுபவர், அங்கு ஐந்தாம் வகுப்பு பயிலும் பிஞ்சு மாணவர்களைத் தனது கால்களை அமுக்கச் சொல்லியும், கழிவறையைச் சுத்தம் செய்யச் சொல்லியும் கொடூரமாகத் துன்புறுத்தியுள்ளார்.

மேலும், “இந்த விஷயத்தை வெளியே யாரிடமாவது சொன்னால் கடுமையான தண்டனை கிடைக்கும்” என்று அந்தச் சிறுமிகளை மிரட்டியும் உள்ளார். இந்தத் தகவலைக் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறவே, அதிர்ந்துபோன பெற்றோர் உடனடியாகப் பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளிக்குத் திரண்டு சென்ற பெற்றோர், தலைமை ஆசிரியையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “உங்களுக்குக் கால் வலிக்கிறது என்றால் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டியதுதானே? அதற்காகப் பச்சைக் குழந்தைகளைக் கொண்டு வந்து இதுபோன்ற வேலைகளை வாங்குவது முறையா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர்.

“>

 

ஆசிரியப் பணிக்குரிய ஒழுக்கத்தையும் மனிதாபிமானத்தையும் மீறிச் செயல்பட்ட தலைமை ஆசிரியை மீது உரிய துறைசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.