பெங்களூரில் வாடகைக்கு வீடு தேடிச் சென்ற இளம்பெண்ணுக்கு, எதிர்பாராத வகையில் வேலைவாய்ப்பு கிடைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. நகரில் வீடு தேடுவது என்பது வாடகை, இடம், முன்பணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சவாலாக இருக்கும் நிலையில், வீடு பார்க்கச் சென்ற இடத்திலேயே வேலை வாய்ப்பு கிடைத்தது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அந்த இளம்பெண் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவின்படி, பெங்களூரில் ஒரு நாள் முன்பு குறிப்பிட்ட ஒரு குடியிருப்பில் வீடு பார்க்கச் சென்றுள்ளார். ஆனால், அவர் பார்க்க வேண்டியிருந்த வீட்டில் சம்பந்தப்பட்ட நபர் அப்போது இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதே கட்டடத்தில் இருந்த மற்றொரு வீட்டை பார்வையிட முடிவு செய்துள்ளார். அப்போது அங்கு சிலருடன் அவருக்கு உரையாடல் ஏற்பட்டுள்ளது. அந்த உரையாடல் எதிர்பாராத வகையில் அவருடைய அடுத்தகட்ட வாழ்க்கையில் புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

அந்தக் கட்டடத்தில் சந்தித்த நிறுவனத்தின் நிறுவனர்களுடன் இளம்பெண் பேசியதாகவும், அவரது பேச்சும் அணுகுமுறையும் அவர்களுக்குப் பிடித்திருந்ததாகவும் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு அந்த நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. வீடு பார்ப்பதற்காக சென்ற பயணம், எதிர்பாராத வகையில் வேலை தேடும் வாய்ப்பாக மாறியது அவருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதனை அவர் நகைச்சுவையாக பெங்களூரின் தனித்துவமான அனுபவம் என சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இளம்பெண்ணுக்கு கிடைத்த எதிர்பாராத வாய்ப்பை அதிர்ஷ்டம் என பாராட்டியுள்ளனர். அதேநேரத்தில், பதிவில் இடம்பெற்றிருந்த ஒரு எழுத்துப்பிழையையும் இணையவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். வீடு தேடிச் சென்ற இடத்தில் வேலை கிடைத்த இந்த வித்தியாசமான சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.