மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த ரசிக் சந்திர மொண்டல், கொலை வழக்கில் கடந்த 1994-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். 1988-ஆம் ஆண்டு சொத்து தகராறு தொடர்பாக தனது சகோதரர் சுரேஷ் மொண்டலை கொலை செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 1994-ஆம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிறையில் கழித்துள்ளார். வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பாதிப்புகள் காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அவர் நீதிமன்றத்தை நாடினார்.
இதனிடையே, ரசிக் சந்திர மொண்டல் தனது தண்டனையை ரத்து செய்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 2020-ஆம் ஆண்டு அவர் 99 வயதாக இருந்தபோது இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். அவரது வயது மற்றும் வயது தொடர்பான உடல்நலப் பிரச்னைகளை கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றம், 2024 நவம்பர் 29-ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் அல்லது பரோல் வழங்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, 105 வயதாகும் ரசிக் சந்திர மொண்டலின் தற்போதைய வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு, வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தது. மேலும், அவரது ஆயுள் தண்டனையில் ஏதேனும் காலம் மீதமிருந்தாலும், இனி அவரை மீண்டும் சிறையில் அடைக்கக் கூடாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இதன்மூலம் 2024-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் உத்தரவு நிரந்தரமானதாக மாற்றப்பட்டது.
இதையடுத்து 105 வயதான ரசிக் சந்திர மொண்டல் தனது வாழ்நாளின் எஞ்சிய காலத்தை சுதந்திரமாக குடும்பத்தினருடன் கழிக்க வழி ஏற்பட்டுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்தாலும், மிக நீண்ட கால சிறைவாசம், முதுமை மற்றும் உடல்நலக் காரணிகளை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் இந்த மனிதாபிமான முடிவை எடுத்துள்ளது. 2018-ஆம் ஆண்டு கல்கத்தா உயர்நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை நிராகரித்திருந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவால் அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும் நிலை முடிவுக்கு வந்துள்ளது.
