நமது அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக வெங்காயம் உள்ளது. ஆனால், சமீபகாலமாகச் சந்தைகளில் வாங்கப்படும் பெரிய வெங்காயங்களில் கருப்பு நிறக் கோடுகளோ அல்லது கருமை படர்ந்த அழுகிய நிலையோ காணப்படுவது அதிகரித்துள்ளது. வெங்காயத்தில் காணப்படும் இந்த கருமை நிறத்திற்கு முக்கியக் காரணம் ‘அஸ்பெர்கிலஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு வகையான பூஞ்சை ஆகும்.
இந்த பூஞ்சை பொதுவாக மண், காய்கறிகள் மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள சூழல்களில் எளிதாக உருவாகும் தன்மையுடையது. வெங்காயத்தில் இந்த பூஞ்சைப் படலம் சேரும்போது, அது வெங்காயத்தின் தன்மையை மாற்றி உணவிற்குப் பயன்படுத்தத் தகுதியற்றதாக ஆக்கிவிடுகிறது. இத்தகைய பூஞ்சை படர்ந்த வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.
குறிப்பாக, இந்த பூஞ்சையில் உள்ள நச்சுப்பொருட்கள் மனித உடலில் ஒவ்வாமை (Allergy) மற்றும் சுவாசக் குழாய் சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மூட்டுப் பிரச்சனைகள் உள்ளவர்கள் இத்தகைய கருப்புப் படலம் படர்ந்த வெங்காயங்களை முழுமையாகத் தவிர்ப்பது மிகவும் அவசியமாகும்.
எனவே, கடைகளிலோ அல்லது வீட்டிலோ வெங்காயத்தின் மீது கருப்புப் புள்ளிகளோ அல்லது கோடுகளோ இருந்தால் அந்த வெங்காயத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை வெளிப்புறத் தோலில் மட்டும் லேசாக இருந்தால், அந்தப் பகுதியை முழுமையாக நறுக்கி அகற்றிவிட்டு, வெங்காயத்தை நீரில் நன்றாகக் கழுவிய பிறகே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.
வெங்காயத்தைப் பாத்திரங்களிலோ அல்லது பிளாஸ்டிக் பைகளிலோ அடைத்து வைக்காமல், காற்றோட்டமான மற்றும் உலர்வான இடங்களில் சேமித்து வைப்பது ஈரப்பதத்தால் பூஞ்சை உருவாவதைத் தடுக்கும். அதேபோல், பூஞ்சை தாக்கப்பட்ட வெங்காயங்களை உடனடியாகக் கண்டறிந்து தனியாக அகற்றிவிட்டால், மற்ற நல்ல வெங்காயங்களுக்கும் இந்த பூஞ்சை பரவாமல் தடுத்துவிடலாம்.
