’தர்மதுரை’ படத்தில் டாக்டர் விஜய் சேதுபதி கிளைமாக்ஸில் தான் படுகாயமடைந்த நிலையிலும் மற்றொருவருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பார். அதே போன்ற ஒரு நெகிழ்ச்சியான நிஜச் சம்பவம் கேரள மாநிலம் கண்ணூரில் நடந்துள்ளது. Dr. ஷிரின் சுபைர் என்ற பெண் மருத்துவருக்குத் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அங்கே கேட்டரிங் வேலையில் ஈடுபட்டிருந்த இரு பெண் ஊழியர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதில் ஒரு பெண்ணுக்கு மூக்கில் ரத்தம் வடிந்ததும், மற்றொரு பெண் தலைச்சுற்றலால் மயங்கி விழப்போன நிலையையும் கண்ட டாக்டர் ஷிரின், தனது திருமணக் கொண்டாட்டங்களை உடனடியாக நிறுத்திவிட்டு மணப்பெண் கோலத்திலேயே அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிக வேகமாக பரவி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய டாக்டர் ஷிரின், அவசர காலத்தில் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை முதலுதவி விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். இவரின் இந்தச் செயலைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இவரைப் பாராட்டி வருகின்றனர்.
