கரூரில் நடந்த நடிகர் விஜய்  பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சோக நிகழ்வு, நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையிலேயே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு, கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவத்தில் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார். அத்துடன், அந்த நிகழ்ச்சி மற்றும் அதன் பின்னணியில் நடந்த விபரீதங்களைப்பற்றியும், சமூக சலனங்களைப்பற்றியும் இருவரும் சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக உரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ். அழகிரி, செய்தியாளர்களிடம் இந்த உரையாடல் குறித்து விளக்கமளித்தார். அவர் கூறியதாவது: “ராகுல்காந்தி ஒரு தேசியத் தலைவர். அவருக்கும் விஜய்க்கும் நீண்ட காலமாகவே தனிப்பட்ட நட்பு உள்ளது. அதன்பேரில் அவர் விஜய்யுடன் உரையாடியிருப்பார். ஆனால் இதை அரசியல் கூட்டணியாக பார்க்க முடியாது. மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெருக்கமான நண்பராக இருப்பதால், ராகுல் அவரோடும் பேசினார். மேலும் எந்தவிதமான சூழலிலும் திமுக உடனான காங்கிரஸ் கூட்டணி கேள்விக்குறியாகாது. இது தவிர, விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி ஏற்படும் என்ற ஊகங்கள் அடிப்படை அற்றவை,” என்றார்.