தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மாதம் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக மாநில அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தினர் இரண்டு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதாவது இரண்டு விதமான வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகளை நகர் முழுவதும் ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டிகளில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
தளபதியை காப்போம் தமிழகத்தை மீட்போம். எவ்வளவு வலிகள் கொடுத்தாலும் நாங்கள் வழி மாற மாட்டோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் என்றுமே தர்மமே வெல்லும். நாங்கள் எப்போதுமே உங்களுடன் தான் நிற்போம் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் முன்னதாக நடிகர் விஜயை கைது செய்ய வேண்டும் என தமிழக மாணவர் சங்கம் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
