மகாராஷ்டிர மாநிலம் புனேவில், தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகச் சந்தேகித்து, வழக்கறிஞரின் மனைவி ஒரு பெண்ணை இரும்புக் கம்பியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் 35 வயதான பூனம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அந்த வழக்கறிஞரின் அலுவலகத்திலேயே ஊழியராகப் பணியாற்றி வந்தார். 42 வயதான சுவாதி சாவந்த், தனது கணவருக்கும் பூனத்திற்கும் இடையே தவறான உறவு இருப்பதாக நீண்ட நாட்களாகச் சந்தேகப்பட்டு வந்துள்ளார்.
இந்த ஆத்திரத்தில், அலுவலகத்திற்குச் சென்ற சுவாதி, அங்கு பூனத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் அவரைத் தாக்கியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் பூனம் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கொலையை மறைப்பதற்காகச் சடலத்தைச் சாக்குப்பையில் கட்டி அப்புறப்படுத்த முயன்ற சுவாதியை போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட சுவாதியின் கணவர் ஒரு அரசியல் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருப்பதால், இந்த விவகாரம் புனேவில் பெரும் அரசியல் மற்றும் சமூகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸார் தற்போது சுவாதி மீது கொலை வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
