இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோரின்  வீரர் தேர்வு முறையை சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் திறமை மற்றும் போட்டிகளில் வெளிப்படுத்தும் சிறப்பான செயல்பாடுகளைப் பொருட்படுத்தாமல், தங்களுக்குப் பிடித்தமான சொந்த நண்பர்களுக்கு மட்டுமே அணியில் வாய்ப்பளிப்பதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் மிகச் சிறப்பாகப் பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வரும் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி போன்ற அனுபவமிக்க வீரர்களைத் தொடர்ச்சியாகப் புறக்கணிப்பது ஏன் என்று சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய போட்டியில் இவர்கள் இருவரில் ஒருவர் அணியில் இருந்திருந்தாலும் கூட, போட்டியின் முடிவே முற்றிலும் மாறியிருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பிடித்தமான வீரர்களை மட்டுமே அணியில் தேர்வு செய்யப் போகிறீர்கள் என்றால், மற்ற வீரர்கள் எதற்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும்?” என்று ஆவேசமாக வினவியுள்ள சேவாக், தற்போதைய இந்திய அணி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை முற்றிலும் கோமாளித்தனமானது என்றும், இது திறமையான வீரர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடு மற்றும் வீரர் தேர்வு முறை குறித்து ரசிகர்கள் மற்றும் வல்லுநர்களிடையே பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், சேவாக் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.