தளபதி விஜய் நடித்து இன்னும் ரிலீஸ் ஆகாத ‘ஜன நாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் லீக் ஆகி சினிமா உலகையே அதிரவைத்த நிலையில், கோவையில் ஒரு கேபிள் ஆப்ரேட்டர் செய்த காரியம் விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
கோவை கருமத்தப்பட்டி பகுதியில் உள்ள ‘ராசி பிரைம் மூவி’ என்ற உள்ளூர் சேனலில், லீக் ஆன ஜன நாயகன் படத்தை சுமார் இரண்டு மணி நேரம் தாராளமாக ஒளிபரப்பியுள்ளார் அந்த கேபிள் ஆப்ரேட்டர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தமிழக வெற்றிக் கழகத்தினர், உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். முதலில் புகாரைப் பெறத் தயங்கிய கருமத்தப்பட்டி போலீசார், பின்னர் தவெக-வினரின் தொடர் அழுத்தத்தால் வழக்குப் பதிவு செய்து அந்த ஆர்வக்கோளாறு கேபிள் ஆப்ரேட்டரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே படம் ஹெச்.டி தரத்தில் லீக் ஆனதால் 500-க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள சூழலில், தில்லாக கேபிள் டிவியிலேயே படத்தை ஓட்டிய சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
