தமிழக அரசியலில் ‘கிங் மேக்கர்’ எனப் பெயரெடுத்த தேமுதிக, இந்த முறை திமுக-வுடன் தான் கூட்டணி வைக்கும் என்று அனைவரும் அடித்துச் சொல்லி வந்த நிலையில், இப்போது ஒரு பெரிய குண்டைப் போட்டுள்ளது. திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை போதவில்லை என்பதால், கடைசி நேரத்தில் பேச்சை முறித்துக்கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கதவைத் தட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக தரப்பு உறுதி அளித்திருப்பதாகக் கூறப்படுவதால், பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தாமரைத் தடாகத்தில் முரசு கொட்டத் தயாராகிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

​இந்தத் திடீர் மாற்றத்தால் திமுக கூட்டணி கடும் அதிர்ச்சியில் உள்ளது. எப்போதும் திமுக பக்கம் சாயும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு கட்சி, கடைசி நிமிடத்தில் ‘ரூட்’ மாறியது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின் கணக்கீடுகளையே புரட்டிப் போட்டுள்ளது. விஜய்யின் தவெக ஒரு பக்கம் மிரட்ட, இப்போது தேமுதிகவும் பாஜக பக்கம் கை கோர்த்தால் ஆளுங்கட்சிக்கு அது மிகப்பெரிய சவாலாக அமையும். தொகுதிப் பங்கீடு கிட்டத்தட்ட இறுதியான நிலையில், தேமுதிக-வின் இந்த அதிரடி முடிவு தமிழக அரசியலில் ஒரு பெரிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.