தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், செய்தியாளர்களிடம் பேசும்போது 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்த அதிரடியான சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “தவெக தலைவர் விஜய் அவர்கள் ஏற்கனவே சொன்னது போல, ஊழல் மற்றும் எந்தவொரு குற்றச்சாட்டுகளும் இல்லாத ஒரு நல்லாட்சியை வழங்குவதே எங்கள் கட்சியின் ஒரே நோக்கம்” என்று அவர் உறுதிபடக் கூறினார். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும், அந்த மாற்றத்தை தவெக நிச்சயம் உருவாக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கூட்டணி குறித்துப் பேசிய அவர், “நட்பு ரீதியிலான கட்சிகளுடன் இணைந்தோ அல்லது தனித்தோ தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட தவெக இப்போதே தயாராக உள்ளது” என்றார். குறிப்பாக, தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜய்யின் முகம் மட்டுமே போதும் என்றும், அதுவே வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் அவர் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மற்ற கட்சிகள் கூட்டணிக்கு முண்டியடிக்கும் வேளையில், தவெக-வின் இந்தத் தன்னம்பிக்கை பேச்சு தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
