அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் (AMMK) மாணவியர் அணி செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த வழக்கறிஞர் பி.ஜீவிதா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி அவப்பெயரை உண்டாக்கினார் என்ற குற்றச்சாட்டின்கீழ் டிடிவி தினகரன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அமமுக, அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், சசிகலாவை ஜீவிதா நாச்சியார் ரகசியமாகச் சந்தித்துப் பேசியதே இந்த நீக்கத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

​ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தபோது சசிகலாவைப் பார்த்ததும் டிடிவி தினகரன் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறியது ஏற்கனவே சர்ச்சையானது. இப்போது சசிகலாவுடன் நெருக்கம் காட்டிய நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாகத் துண்டிக்கும் வேலையில் தினகரன் இறங்கியுள்ளார். “கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது” என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, அமமுக-வில் சசிகலா ஆதரவாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி நீக்கம் அமமுக மற்றும் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.