தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம், இன்று (பிப். 6) சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் மனுவை அக்கட்சியின் தலைவர் விஜய் சார்பில் முக்கிய நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி மனுக்களைப் பெற்றனர்.
பிப்ரவரி 14-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் பனையூரில் குவிந்து வருவதால் அந்தப் பகுதியே திருவிழா கோலம் பூண்டுள்ளது. ஆனால், விருப்ப மனு படிவத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கேள்வி தொண்டர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “கட்சி சார்பாக போராட்டம் நடத்தி சிறைக்குச் சென்றுள்ளீர்களா?” என்ற விவரம் கேட்கப்பட்டுள்ளதால், களப்பணியில் தீவிரமாக இருப்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுமோ என்ற அதிர்ச்சியில் நிர்வாகிகள் உள்ளனர்.
இன்னொரு பக்கம், பனையூர் குடியிருப்புவாசிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தொண்டர்களின் வாகனங்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை என்றும், எங்கு பார்த்தாலும் தடுப்புகளும் நெரிசலுமாக இருப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு முன்பே பனையூர் இவ்வளவு பரபரப்பாக இருப்பதால், வரும் நாட்களில் இன்னும் என்னென்ன அதிரடிகள் காத்திருக்குமோ என அரசியல் வட்டாரமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
