திமுகவில் பல இடங்களில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் காரணமாக, சங்கரன்கோவிலைத் தொடர்ந்து, தற்போது கிருஷ்ணகிரி நகராட்சியின் சேர்மனும் பதவி இழந்துள்ளார்.
திமுகவைச் சேர்ந்த நகராட்சித் தலைவர் பரிதாவுக்கு எதிராக, அவரது சொந்தக் கட்சி கவுன்சிலர்களே கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் கிருஷ்ணகிரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் முக்கியமான சமயத்தில், திமுகவின் நிர்வாகிகளுக்கு எதிராக அடுத்தடுத்து நடக்கும் பதவி நீக்க சம்பவங்கள், கழகத் தலைமைக்குத் தலைவலியை உருவாக்கியுள்ளன. உட்கட்சிப் பூசலைக் கட்டுப்படுத்தத் தலைமை நடவடிக்கை எடுக்கத் தவறியதன் விளைவாகவே, சொந்தக் கட்சியினரே சேர்மனுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்து வெற்றிபெறச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அடுத்தடுத்த பதவி இழப்புகள், திமுகவின் ஒற்றுமை குறித்து எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்ப வாய்ப்பாக அமைந்துள்ளது.
