செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெறவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதில் பெரும் பெருமை கொள்வதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக எனும் தீயசக்தியின் பிடியில் சிக்கித் தமிழகம் சீரழிந்து வருவதாகவும், அதிலிருந்து மாநிலத்தை மீட்கும் அறப்போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திமுகவிற்கு எதிராகத் தொண்டர்கள் அனைவரும் ஆக்ரோஷமாகக் களமாடி வரும் நிலையில், அவர்களை உற்சாகப்படுத்த வரும் பிரதமரைச் சிறப்பான முறையில் வரவேற்க வேண்டியது நமது கடமை என்று அவர் கூறியுள்ளார்.

மதுராந்தகமே மலைத்துப் போகும் அளவிற்குப் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கூட வேண்டும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் என்ன என்பதை இந்த கூட்டத்தின் மூலம் திமுகவிற்கு உணர்த்துவோம் என்றும் நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் அறைகூவல் விடுத்துள்ளார்.