உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணமான ஒரே மாதத்தில், தனது கணவரின் நிறம் கருப்பாக இருப்பதாகக் கூறி மணப்பெண் ஒருவர் பிரிந்து சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதாவது ஹாத்ரஸ் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் என்பவருக்கும், ஒரு பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அபிஷேக், முறைப்படி திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் மணப்பெண் தனது கணவருடன் வாழ விருப்பம் இல்லை எனத் தெரிவித்துப் புகாரளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “எங்களது தாம்பத்திய உறவில் எனக்குத் திருப்தி இல்லை. குடும்பத்தில் வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றாலும், சில விஷயங்களை என்னால் வெளிப்படையாகப் பேச முடியவில்லை. இனி அவருடன் இணைந்து வாழ எனக்கு விருப்பம் இல்லை; முறைப்படி விவாகரத்து பெறப் போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மனைவியின் இந்தக் குற்றச்சாட்டு குறித்துக் கணவர் அபிஷேக் கூறுகையில், “எனது கறுத்த நிறம்தான் அவருக்குப் பெரிய பிரச்சினையாக உள்ளது. அதனால்தான் என்னைப் பிடிக்கவில்லை என்கிறார். இந்தப் பிரச்சினையைச் சுமூகமாகப் பேசித் தீர்க்க நான் பலமுறை முயற்சி செய்தேன். ஆனால் அவர் எதையும் கேட்கத் தயாராக இல்லை. சுமார் 3 லட்சம் ரூபாய் செலவு செய்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இப்போது வெறும் நிறத்தைக் காரணமாகக் காட்டி திருமண உறவை முறிப்பது எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் நிறத்தைக் காரணமாகக் கொண்டு திருமணமான ஒரு மாதத்திற்குள்ளேயே மணப்பெண் பிரிந்து சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
