தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

 டிகர் விஜய் முதலில் அரசியலுக்கு வரட்டும். அவர் இதுவரை தனது அரசியல் கொள்கை என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை. வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பது மக்களிடத்தில் எடுபடாது. தமிழக மக்கள் அனைத்து வகையான அரசியலையும் பார்த்துவிட்டனர். விஜய் ஒரு அரசியல்வாதியே கிடையாது.

கரூர் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவர்களை அவர் நேரில் வந்து எட்டிப்பார்க்கவில்லை. 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தபோது வராதவருக்கு, 7 கோடி மக்களை எப்படிக் காப்பாற்ற முடியும் என்ற எண்ணம் எழும். அவர் ஏதோ நடித்துப் பார்க்கிறார், டான்ஸ் ஆடிப் பார்க்கிறார். இந்த டப்பாங்குத்து ஆட்டம் எல்லாம் ஊர் பக்கமே நிறையப் பேர் ஆடுவார்கள்.

தமிழகத்தில் நிலைத்த அரசியலுக்கும் புகழுக்கும் ஒரே இயக்கம் திமுகதான். இந்தியாவின் தலைசிறந்த முதல்வரான மு.க.ஸ்டாலினுக்கு 70 சதவீத மக்களின் ஆதரவு உள்ளது. எந்த இயக்கமாக இருந்தாலும் அரசியல் ரீதியாக விமர்சிக்கத் தயாராக உள்ளோம்.

கூட்டணிக் கட்சிகள் கூடுதல் தொகுதிகளைக் கேட்பது அவர்களது உரிமை. வெற்றி வாய்ப்பைக் கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனநாயக ரீதியாகத் தொகுதிகளைப் பங்கீடு செய்வார். காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாக திமுகவுடன் பயணித்து வருகிறது. இந்த வலுவான கூட்டணி சட்டமன்றத் தேர்தல் மட்டுமின்றி, உள்ளாட்சித் தேர்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெறும்.

கடந்த 4 ஆண்டுகளாக எங்கே இருந்தார் என்றே தெரியாத எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்க மாட்டார்கள். பாஜகவின் அண்ணாமலை திடீரெனப் பழனியில் ஆர்ப்பாட்டம் என்கின்றார்; அவருக்கும் பழனிக்கும் என்ன சம்பந்தம்? ஓ.பன்னீர்செல்வம் திமுகவுக்கு வருவது குறித்து முதல்வர் மட்டுமே முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.