சேலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த நெல்லை மாணவி வர்ஷினி கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது தந்தையே தலையணையால் அமுக்கிக் கொன்றதாகப் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் வரதராஜன் (52). இவரது மகள் வர்ஷினி (22), சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ஓமியோபதி இறுதி ஆண்டு படித்து வந்தார். சேலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்த வர்ஷினி, கடந்த ஜனவரி மாதம் 7-ஆம் தேதி மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து இரும்பாலை போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். வர்ஷினி உயிரிழந்த அன்று, நெல்லையிலிருந்து அவரது தந்தை வரதராஜன் சேலம் வந்து சென்றதும், அதன்பின் அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டதும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்று சேலத்தில் வைத்து போலீசார் அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வரதராஜன் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது: “எனது மகள் வர்ஷினி பள்ளிப் பருவத்தில் டேக்வாண்டோ பயிற்சியாளர் ஒருவரைக் காதலித்து வந்தார். அந்தப் பயிற்சியாளருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். திருமணமான ஒருவரை என் மகள் காதலிப்பதை என்னால் ஏற்க முடியவில்லை. பலமுறை கண்டித்தும், கெஞ்சிக் கேட்டும் அவள் காதலைக் கைவிடவில்லை.
காதலை மறக்கச் செய்யவே அவளைச் சேலத்தில் கல்லூரியில் சேர்த்தேன். ஆனால், கல்லூரி விடுமுறையில் ஊருக்கு வரும்போதும் அவள் வீட்டிற்கு வராமல் காதலனையே சந்தித்து வந்தாள். சம்பவத்தன்று சேலத்திற்கு நேரில் சென்று அவளிடம் காதலைக் கைவிடுமாறு கெஞ்சினேன். அவள் பிடிவாதமாக மறுத்தாள். ஆத்திரத்தில் அவளை அடித்தபோது கீழே விழுந்தாள். அப்போது அங்கிருந்த தலையணையால் அவள் முகத்தை அமுக்கிக் கொலை செய்தேன் என்றார்.
கொலை செய்த பிறகு மகளின் செல்போனை எடுத்துக் கொண்டு சென்னை சென்ற வரதராஜன், வடபழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து அடையாளம் மாற முயன்றுள்ளார். பின்னர் திருப்பதி மற்றும் திருவண்ணாமலைக்குச் சென்று தலைமறைவாக இருந்துள்ளார். போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்த அவர், நீதிமன்றத்தில் சரணடையச் சேலம் வந்தபோது போலீசாரிடம் சிக்கினார். மேலும் கௌரவம் கருதி தந்தை ஒருவரே தனது பெற்ற மகளைக் கொலை செய்த சம்பவம் சேலம் மற்றும் நெல்லை பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
