அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, திண்டிவனம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹரிதாஸ் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
திண்டிவனம் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்த ஹரிதாஸ், இன்று சென்னை அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் திமுக துண்டை அணிவித்து முறைப்படி வரவேற்பு அளித்தார்.
சமீபகாலமாக அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களான சின்னசாமி மற்றும் மாதேஸ்வரன் ஆகியோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதேபோல், முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணனும் அண்மையில் தமாகாவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் இருந்தும், கட்சியின் நீண்டகால முக்கிய முகங்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வரிசையாகக் கட்சி மாறுவது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு திமுக தனது பலத்தைப் பெருக்கி வருவது அதிமுக வட்டாரத்தில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.
