தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவும் இழுபறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது  திமுக கூட்டணியில் நீண்டகாலமாக அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சி, இந்த முறை தங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக:தமிழக ஆட்சியில் பங்கு (அமைச்சரவையில் இடம்). 41 சட்டப்பேரவைத் தொகுதிகள். 2 மாநிலங்களவை (Rajya Sabha) இடங்கள். உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீத இட ஒதுக்கீடு. போன்ற கோரிக்கைகளை திமுக தலைமைக்கு காங்கிரஸ் முன்வைத்துள்ளது.

காங்கிரஸ் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தரப்பில் இன்னும் குழு அமைக்கப்படாமல் மௌனம் காக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, திமுகவின் மூத்த நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து தங்களது கவலையைத் தெரிவித்துள்ளனர்.

“கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸிற்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அவர்களால் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. திமுக ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு அதுவே முக்கிய காரணமாக அமைந்தது. எனவே, இந்த முறையும் கூடுதல் இடங்களை ஒதுக்கி அதே தவறைச் செய்ய வேண்டாம்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 நிர்வாகிகளின் கருத்தால் முதல்வர் மு.க.ஸ்டாலினும் தீவிர யோசனையில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே, காங்கிரஸ் தரப்பைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்துவிட்டு, தேமுதிக-வை கூட்டணியில் இணைக்க திமுக ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை திருவனந்தபுரம் வரை சென்று திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்துப் பேசியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தேமுதிக கூட்டணியில் இணையும் பட்சத்தில், காங்கிரஸிற்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால் திமுக கூட்டணியில் புதிய மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.