உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், கடந்த 2017-ஆம் ஆண்டு 17 வயது சிறுமி ஒருவரை வீடுபுகுந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முக்கியக் குற்றவாளியான சித்திக் என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ₹19,000 அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனில் குமார் கர்வார் அதிரடித் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2017 மே 22 அன்று, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஒரு திருமண விழாவிற்குச் சென்றிருந்தனர்.
வீட்டில் சிறுமியும் அவரது இரு சகோதரிகளும் மட்டுமே இருந்த நிலையில், நள்ளிரவில் பக்கத்து வீட்டை சேர்ந்த சித்திக், தனது மைனர் நண்பனுடன் சேர்ந்து சுவரேறி குதித்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார். முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை இருவரும் சேர்ந்து கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அறையில் தூங்கிக் கொண்டிருந்த மற்ற இரு சகோதரிகளும் ஓடிவந்து சத்தம் போடவே, குற்றவாளிகள் அவர்களையும் தாக்கியுள்ளனர்.
இந்தக் கொடூரச் செயலால் மனமுடைந்த அந்தப் பெண், சம்பவ இடத்திலேயே துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சிறுமி இறந்ததைக் கண்ட குற்றவாளிகள், மற்ற இரு சகோதரிகளையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். ஆனால், அவசரத்தில் குற்றவாளிகளின் மொபைல் போன் சிறுமியின் சடலத்திற்கு அருகிலேயே விழுந்ததால், போலீஸார் அவர்களை எளிதாகக் அடையாளம் கண்டு கைது செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, பிரபல கவிஞர் மைதிலிஷரன் குப்தாவின், பெண்ணின் வாழ்க்கையே, இதுதான் உனது கதை; மார்பில் பாலும் கண்களில் கண்ணீரும் தான் மிச்சம் என்ற உருக்கமான கவிதை வரிகளைத் தீர்ப்பில் மேற்கோள் காட்டி, சிறுமி இறந்த சூழ்நிலைக்கு இந்த வரிகள் மிகப்பொருத்தமாக உள்ளதாகக் குறிப்பிட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு மைனர் குற்றவாளியின் கோப்பு சிறுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
