முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணி ஏற்கனவே வெளியேறிய நிலையில், இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனமும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீதே இருந்தது. ஏனெனில், இத்தொடரின் முந்தைய லீக் ஆட்டங்களின் போது இலங்கை வீரர்களுக்கும் வைபவிற்கும் இடையே மைதானத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

“இது ஒன்றும் ஐபிஎல் தொடர் கிடையாது, ஒழுங்காக வீட்டுக்கு போ!” என்று இலங்கை வீரர் ஒருவர் வைபவை வம்புக்கு இழுத்து ஸ்லெட்ஜிங் செய்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தன. இதனால், இந்த இறுதிப்போட்டியில் இலங்கை அணிக்கு வைபவ் எப்படிப் பதிலடி கொடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.

 

இந்நிலையில், தன் மீதான வன்மத்திற்கும் விமர்சனத்திற்கும் இலங்கை பந்துவீச்சாளர்களைத் தனது பேட் மூலமாகவே கதற விட்டுப் பழிதீர்த்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. மைதானத்திற்குள் நுழைந்த முதல் பந்திலிருந்தே தனது ஆக்ரோஷமான கோபத்தை ரன்களாக மாற்றிய அவர், வெறும் 11 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்தார். இதன் மூலம் 12 பந்துகளில் அரைசதம் அடித்திருந்த கே. வீரரத்னாவின் சாதனையை முறியடித்ததோடு, அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

324 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டுடன் 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து, சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழப்பில் இழந்தார். மிட்-ஆஃப் திசையில் பந்தை அடிக்க முயன்று அவர் ஆட்டமிழந்தபோது, சதம் தவறவிட்ட வருத்தம் ஏதுமின்றி புன்னகையுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். அப்போது, பெஞ்சில் அமர்ந்திருந்த இலங்கை வீரர்களே எழுந்து நின்று அவரது அசாத்திய ஆட்டத்தைப் பாராட்டியதன் மூலம், இரு நாட்டு வீரர்களுக்கும் இடையேயான மைதான மோதல் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது தெரிகிறது.