தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் மின்வெட்டுப் பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு, மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் இன்று சட்டமன்றத்தில் அதிரடியான விளக்கங்களை முன்வைத்து பதிலளித்துப் பேசினார். தமிழ்நாட்டில் எதனால் மின்வெட்டு ஏற்படுகிறது என்பது குறித்து தாங்கள் தொடர்ந்து தெளிவாகக் கூறி வருவதாகக் குறிப்பிட்ட அவர், முந்தைய ஆட்சிக்காலமான கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரத் துறையில் எந்தவொரு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்யத் தவறிவிட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய மின்துறை அமைச்சர், மின்சாரத் தட்டுப்பாடு எதனால் ஏற்பட்டது, எங்கெல்லாம் வேண்டுமென்றே பியூஸ் கேரியர்கள் கழற்றி எடுத்துச் செல்லப்பட்டன என்பது குறித்த முழுமையான விளக்கங்களையும் தாங்கள் கண்டறிந்து வைத்துள்ளதாகத் தெரிவித்தார். மின்சாரத் துறை தொடர்பாக இன்னும் ஒரு சில தினங்களில் முழு விபரங்களுடன் கூடிய அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளதாக அறிவித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரின் இந்த அதிரடிப் பேச்சு சட்டமன்ற விவாதக் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
