தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து மிக முக்கியமான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து அதிரடியாக உரையாற்றினார்.

அரசு பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிடுவது தவறில்லை என்று குறிப்பிட்ட அவர், ஆனால் அங்கு செல்லும் இடங்களில் மாணவர்கள் மத்தியில் தவறான அர்த்தங்கள் கொண்ட சினிமாப் பாடல்களைப் போட்டு அவர்களை நடனமாட வைப்பதாகக் கூறி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார்.

​மேலும் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், பள்ளி மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும் விதத்திலான பாடல்களை ஒளிபரப்பினால் அது பயனுள்ளதாக இருக்கும் என்றும், அதை விடுத்து சினிமாவில் வரும் குத்து பாடல்களையும், தவறான அர்த்தங்களை உடைய பாடல்களையும் மாணவர்கள் மத்தியில் ஒளிபரப்புவதை ஏற்க முடியாது என்றும் சாடினார்.

எனவே, தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, அரசு பள்ளிகளில் சினிமா குத்து பாடல்கள் ஒளிபரப்பப்படுவதை முற்றிலும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் மிக அழுத்தமாக வலியுறுத்தினார்.