தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அதிரடியாக உரையாற்றினார். புதிய அரசின் கொள்கை விளக்கங்களுக்கும் தமிழ்நாட்டின் தற்போதைய கள எதார்த்தத்திற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடுகள் தங்களுக்குத் தெரிவதாகக் கூறி தனது விமர்சனத்தைத் தொடங்கிய அவர், எதிர்க்கட்சி வரிசையில் மட்டுமல்லாமல், தற்போது ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பவர்களிடமும் தங்களது வாக்குகள் தான் உள்ளதாக ஒரு சுவாரசியமான அரசியல் குண்டைத் தூக்கிப் போட்டார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை மாதந்தோறும் தவறாமல் வழங்கி வருவதற்கும், காலை உணவுத் திட்டத்தை நீட்டிக்கப் போவதாக அறிவித்ததற்கும் புதிய அரசுக்குத் தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
அதே சமயம், முந்தைய அரசின் மிக முக்கியமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை தற்போதைய அரசு முடக்க முயற்சிப்பதாகக் கேள்விப்பட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் 41 லட்சம் மாணவர்கள் மற்றும் யுபிஎஸ்சி தேர்வர்கள் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளதையும், இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி ராஜேஸ்வரி இத்திட்டத்தின் பயனாளி என்பதையும் சுட்டிக்காட்டி இத்திட்டத்தை முடக்கக் கூடாது என சட்டமன்றத்தில் மிக அழுத்தமாக வலியுறுத்தினார்.
