பீகாரைச் சேர்ந்த பிந்து குமார் என்ற மாணவர் தேர்வு எழுதுவதற்காக வாரணாசிக்கு வந்துள்ளார். வாரணாசி கேண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு உணவுக் கடையில், ஒரு பிளேட் சோலே பட்டூரே வெறும் 20 ரூபாய் என்று கூறி அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர் சாப்பிட்டு முடித்ததும் அந்த கடைக்காரர் அவரிடம் 120 ரூபாய் கேட்டுள்ளார். 20 ரூபாய் என்று கூறிவிட்டு 6 மடங்கு அதிகமாகப் பணம் வாங்கியதால் ஏமாற்றமடைந்த அந்த மாணவர், உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே போலீசாரிடம் சென்று புகார் அளித்துள்ளார்.

“>

மேலும் மாணவனின் புகாரைத் தொடர்ந்து போலீசார் அந்த கடைக்காரரிடம் சென்று விசாரணை நடத்தினர். 20 ரூபாய் என்று கூறிவிட்டு ஏன் 120 ரூபாய் வாங்கினீர்கள் என்று போலீசார் கண்டித்ததை அடுத்து, அந்த வியாபாரி தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டார். பின்னர் போலீசாரின் உத்தரவின் பேரில், மாணவரிடம் கூடுதலாக வாங்கிய பணம் அங்கேயே உடனடியாகத் திருப்பித் தரப்பட்டது.

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர, அது தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இதேபோல தங்களை ஏமாற்றி அதிகப் பணம் வாங்கியதாகப் பல பயணிகளும் தங்களின் குமுறல்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.