பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் நோக்கில், காவல்துறை சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’க்கான பிரத்யேக ‘1091’ என்ற கட்டணமில்லா அவசர உதவி எண்ணை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள், குடும்ப வன்கொடுமைகள், பின்தொடர்ந்து தொல்லை தருதல் (Stalking), மிரட்டல்கள் மற்றும் அவசரக் காவல் உதவி தேவைப்படும் இக்கட்டான சூழல்களில் இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் (24×7) இயங்கும் இந்த அவசர உதவி மையத்தில், இதற்கெனச் சிறப்பாகப் பயிற்சி பெற்ற காவலர்கள் பணியமர்த்தப்பட்டுத் தகவல்களை உடனுக்குடன் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்குத் துரிதமாகக் காவல் உதவிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.