“தமிழ்நாட்டோட பொக்கிஷமான சிங்கப்பெண்களைப் பத்தி இனிமே யாராவது தப்பாப் பேசினா நாங்க சும்மா வேடிக்கை பார்க்க மாட்டோம் , சட்டம் தன் கடமையை செய்யும்!”

என்று தமிழக அமைச்சரும் தவெகவின் முக்கியத் தலைவருமான ராஜ்மோகன் அவர்கள் சட்டமன்றத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் விடுத்துள்ள  எச்சரிக்கை கோட்டை வட்டாரத்தில் மாபெரும் அரசியல் அனலைக் கிளப்பியுள்ளது.

தவெகவின் புதிய பெண் காவலர் படையான ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ குறித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேலி பேசி வருவதைச் சுட்டிக்காட்டி ஆவேசமடைந்த அவர், “சட்டமன்றத்தில் சோபா போட்ட கதையை எப்போதுதான் விடுவீர்கள்? உங்களைப் போல் கூட்டணிக் கட்சியினரை பிளாஸ்டிக் நாற்காலி (Plastic chair) போட்டு நாங்கள் ஒருபோதும் சிறுமைப்படுத்தவில்லை” என்று திமுகவின் கடந்த கால அதிகாரத் தோரணையை அக்குவேறாகப் பிரித்து மேய்தார்.

மேலும், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து தவெக அரசு மீது பாய்ந்து குதறும் திமுகவினருக்கு, கடந்த கால ‘அண்ணா பல்கலைக்கழக விவகாரம்’ நினைவுக்கு வரவில்லையா என வினவிய அமைச்சர் ராஜ்மோகன், “யார் அந்த மேலிடம் என்று இன்று எங்களைப் பார்த்துக் கேட்கிறீர்களே.. அன்று வலம் வந்த ‘யார் அந்த சார்?’ என்பது உங்களுக்கு மறந்துவிட்டதா?” என்று டேட்டாக்களுடன் கேள்வி கேட்டு அதிரவைத்தார்.