சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் வந்திருந்த ஆதரவாளர்கள், “எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்தி சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம்” என நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, அரசியல் சூழல் குறித்த பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அரசியலில் எதிரிகள் மற்றும் துரோகிகள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “யார் எதிரி, யார் துரோகி என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதை நான் தனியாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மக்கள் அதனை உணர்ந்துள்ளனர்” என்று சூசகமாகப் பதிலளித்தார்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியா? அல்லது புதிய கட்சியா? என்ற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காத சசிகலா, “நிச்சயமாக வரும் சட்டமன்றத் தேர்தலில் எனது தலைமையில் ‘அம்மா ஆட்சி’ அமையும். அது எப்படி சாத்தியமாகும் என்பதை நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
அதிமுக-வை ஊழல் கட்சி என்று நடிகர் விஜய் விமர்சித்துள்ளது குறித்த கேள்விக்கு, “அதிமுக ஆட்சி எப்படி இருந்தது என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும், தமிழக மக்களுக்கும் நன்கு தெரியும். அம்மாவின் பொற்கால ஆட்சியை மக்கள் இன்றும் நினைவில் வைத்துள்ளனர். அதனால்தான் இப்போதும் அம்மா ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்” என்றார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்தது பற்றி கேட்டபோது, “ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தனிப்பட்ட முடிவு இருக்கும். அதன் அடிப்படையில் அவர்கள் செயல்படுவார்கள். அது பற்றி நான் கருத்துச் சொல்ல முடியாது” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார். மேலும் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், சசிகலாவின் இந்த “அம்மா ஆட்சி” முழக்கம் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
