பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆவலஹள்ளி பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கும், சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகினி (21) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மாலூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த தம்பதியினரிடையே, காலப்போக்கில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டைகள் நடந்து வந்துள்ளன. கணேஷ், தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படும் நிலையில், பொறுக்க முடியாமல் யோகினி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

சம்பவத்தன்று, கோலார் மாவட்டம் நரசாபுரா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்காக நேர்காணல் நடைபெறுவதை அறிந்த யோகினி அங்கு சென்றுள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட கணேஷ், அந்த இடத்திற்கு நேரில் வந்து, சமரசம் பேசுவதாகக் கூறி யோகினியை மீண்டஹள்ளி ஏரிப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த கணேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் யோகினியைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த யோகினியின் மரணம் குறித்து கணேஷ் அவரது தாய்க்குத் தகவலே தெரிவித்துள்ளார். பின்னர், சம்பவ இடத்திலேயே இருந்த கணேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.