சென்னையைச் சேர்ந்த திவ்யா என்பவர், ‘மிஸ்டர் ஹேர் கிளினிக்’ உரிமையாளர் ராஜாராம் என்பவரை நம்பி 30 லட்சம் ரூபாய் முதலீடு செய்து பெரம்பூரில் ஒரு கிளையைத் தொடங்கியுள்ளார். அங்கு தலைமுடி மாற்று சிகிச்சை அளித்தவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்தபோது, அவர்கள் மருத்துவர்கள் அல்ல என்பதும், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மட்டுமே படித்த வடமாநில இளைஞர்கள் என்பதும் தெரியவந்தது.
இது குறித்து திவ்யா அளித்த புகாரின் பேரில், அண்ணா நகரில் உள்ள அந்த கிளினிக்கில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, முறையான மருத்துவத் தகுதி இன்றி சிகிச்சை அளித்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் 14-க்கும் மேற்பட்ட கிளைகளை நடத்தி, பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்துள்ளதாகக் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகுதியற்ற நபர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டதால், அங்கு முடிமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று திவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது அந்த மையம் மூடப்பட்டு, அதன் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள உரிமையாளர் ராஜாராம் மற்றும் நிர்வாகிகளைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
