திருப்பூரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகையை பாஜக நிறுத்திவிட்டதாகக் கூறுவது முற்றிலும் பொய் என்று மறுத்த அவர், காங்கிரஸ் காலத்தை விட பாஜக ஆட்சியில் தான் அதிக உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் சிறுபான்மையினருக்குச் செய்த நன்மைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் திமுக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டினார். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி வழங்குவதில் ஒன்றரை ஆண்டுகள் வரை தாமதம் செய்து, பணிகளை முடக்கும் வேலையைத் தமிழக அரசு பார்த்ததாக அவர் சாடினார்.

இத்தனை தடைகளையும் தாண்டி மத்திய பாஜக அரசு தற்போது எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளை விரைவுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதுவரை ஒருமுறை கூட அந்தப் இடத்திற்குச் சென்று பணிகளைப் பார்வையிடவில்லை என்று அண்ணாமலை விமர்சித்தார்.

தமிழக அரசு எந்த ஒத்துழைப்பும் தராத நிலையிலும், மத்திய அரசு மதுரையில் பிரம்மாண்டமான எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளது என்று கூறிய அவர், பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறுவதை நிறுத்திவிட்டு முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.