அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோருக்கு இடையே அண்மைக்காலமாக வர்த்தக ரீதியான மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, சீனாவுடன் கனடா வர்த்தக உறவு வைத்துக்கொண்டால், அந்நாட்டின் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த அச்சுறுத்தல் கனடா பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மார்க் கார்னி தனது நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார். வெளிநாட்டு மிரட்டல்களுக்குப் பணியாமல், கனடாவை வலுப்படுத்த மக்கள் அனைவரும் உள்நாட்டுப் பொருட்களையே வாங்க வேண்டும் என்று மார்க் கார்னி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் “மற்ற நாடுகளின் செயல்பாடுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நம்மால் எதை மாற்ற முடியுமோ அதில் மட்டும் கவனம் செலுத்துவோம்” என்று குறிப்பிட்ட அவர், கனடியர்கள் தங்களின் பணத்தை உள்நாட்டிலேயே செலவழிப்பதன் மூலம் உள்ளூர் தொழிலாளர்களை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். டிரம்பின் 100% வரி மிரட்டலுக்கு மத்தியில், கனடாவின் பொருளாதார தற்சார்பை நிலைநிறுத்த அவர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.