ஈரானில் நடக்கும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எதிரான ஐநா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்ததன் மூலம், இந்தியா தனது நட்புக்கரத்தை மீண்டும் ஒருமுறை நீட்டியுள்ளது.
ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் பல்வேறு காரணங்களால் கடந்த டிசம்பர் 28 முதல் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்தப் போராட்டங்களை ஈரான் அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருவதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) மேற்கத்திய நாடுகள் ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன.
ஈரானில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச குழு விசாரணை நடத்த வேண்டும் என்பதே இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கம்.
மொத்தம் 47 உறுப்பினர்களைக் கொண்ட இந்த கவுன்சிலில், 25 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இருப்பினும், இந்தியா, சீனா உள்ளிட்ட 7 நாடுகள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து ‘இல்லை’ என்று வாக்களித்தன.
மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற கொள்கை ரீதியான முடிவின் அடிப்படையில் இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்ததாகக் கருதப்படுகிறது.
இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ள இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி, “இந்திய அரசின் உறுதியான மற்றும் கொள்கை ரீதியான ஆதரவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது நீதியையும், தேச இறையாண்மையையும் நிலைநாட்டும் செயல்” எனப் புகழ்ந்துள்ளார்.
