நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில், உரிய மருத்துவ உதவியின்றி வீட்டிலேயே பிரசவம் பார்த்த விபரீதத்தில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவைச் சேர்ந்த நசிம் உசேன் என்பவரின் மனைவிக்கு பிரசவ தேதி நெருங்கிய நிலையில், அவரை மருத்துவப் பரிசோதனைக்கு வருமாறு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாத நசிம் உசேன், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தானாகவே பிரசவம் பார்த்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக அந்தக் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, யாரிடமும் தெரிவிக்காமல் குழந்தையின் உடலை பள்ளிவாசல் ஒன்றில் நசிம் உசேன் அடக்கம் செய்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுமதி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நசிம் உசேனைக் கைது செய்தனர். மருத்துவ வசதிகள் எளிதாகக் கிடைக்கும் இன்றைய காலத்திலும், விழிப்புணர்வு இன்றி வீட்டிலேயே பிரசவம் பார்த்து குழந்தையின் உயிரிழப்புக்குக் காரணமான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.