தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) சார்பில் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் என்னை ஒரு இளைஞரைப் போலச் செயல்படத் தயார்படுத்தி இருக்கிறார். கட்சிப் பணிகளுக்காக இப்போது எனக்கு 20 வயது குறைந்தது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டுள்ளது. தலைவர் விஜய்யின் வழிகாட்டுதலில் இரவு, பகல் பாராமல் உழைக்க நான் முழுமையாகத் தயாராகிவிட்டேன்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், கொங்கு மண்டலத்தில் உள்ள 29 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும். இதுவே எங்களது தற்போதைய லட்சியம். ஒரு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உறுதியான மற்றும் நல்ல தலைமை மிகவும் அவசியம்.
தமிழக மக்கள் இதற்கு முன்பு முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைமைகளைப் பார்த்துவிட்டார்கள். ஆனால், தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. குறிப்பாக, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
மேலும் இத்தகைய அவல நிலையை மாற்றி, தமிழகத்தை முன்னேற்றக் கூடிய சக்தி த.வெ.க. தலைவர் விஜய்யிடம் மட்டுமே உள்ளது. அந்த மாற்றத்தை மக்கள் விரைவில் காண்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
