பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் பதவி தொடர்பாக நிலவி வரும் சர்ச்சையில், அன்புமணி ராமதாஸை தலைவராக அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை டெல்லி உயர் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களில் ஆணையம் முடிவெடுக்க முடியாது என்ற உத்தரவை மாற்றக்கோரி தேர்தல் ஆணையம் சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணையின் போது, பாமக கட்சி உரிமை கோரல் விவகாரத்தில், பிரச்சனை எழுவதற்கு முன்பாகக் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டதாக ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதன் மூலம் அன்புமணி ராமதாஸை பாமக தலைவராக ஏற்கனவே அங்கீகரித்துள்ளதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. தற்போதைய சூழலில், பாமக கட்சி தொடர்பான இந்த வழக்கில் எந்தவொரு தனிப்பட்ட கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என டெல்லி உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளையில், பாமகவின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் யார் என்பதை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்குத் தடை இல்லை என்ற வாதத்தைப் பதிவு செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தேர்தல் ஆணைய வழக்கறிஞர் மற்றும் ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை மட்டுமே தற்போது பதிவு செய்துள்ளதாக நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது
